சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை நடைபெற்றது. காலை 11 மணி முதல் 12 மணி வரை பேச்சுவார்த்தை நடந்த இந்த பேச்சுவார்த்தையில் தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவை சேர்ந்த தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, தலைமை நிலைய செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் கே.எம். காதர் மொய்தீன் தலைமையில் 6 பேர் கொண்ட தொகுதி பங்கீடு குழுவினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை குறித்து கே.எம்.காதர் மொய்தீன் நிருபர்களிடம் கூறும்போது, ‘ கடந்த தேர்தலில் துறைமுகம், வாணியம்பாடி, நாகப்பட்டினம் ஆகிய 3 தொகுதிகள் கொடுத்தார்கள். இந்த முறை நாங்கள் 15 தொகுதிகளின் பட்டியலை கொடுத்துள்ளோம். அதில், 8 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம். பேச்சுவார்த்தை மகிழ்ச்சிகரமாக இருந்தது.’ என்றார்.
இந்த நிலையில் கே.எம்.காதர் மொய்தீன் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தொகுதி பங்கீடு குழுவினர் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் நேற்று மாலையில் சந்தித்துபேசினார். அப்போது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. தொகுதி பங்கீடு குழுவினர் அங்கு இருந்தனர்.
இந்த சந்திப்பின் போது தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து தி.மு.க. தலைவர் கருணாநிதியும், கே.எம். காதர் மொய்தீனும் தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஆம்பூர், வாணியம்பாடி, திருவல்லிக்கேணி, அரவகுறிச்சி, ராமநாதபுரம் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்