உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை ஆகும். மத்திய அரசின்இந்த செயலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
அருணாச்சலப் பிரதேசத்தில் இயங்கிவந்த காங்கிரஸ் அரசில் குழப்பங்களை ஏற்படுத்தி பிறகு அதையே காரணமாகக் கொண்டு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி அதன்பிறகு அங்கு பாஜக அரசு அமைக்கப்பட்டது.அதே வழிமுறையைப் பின்பற்றி உத்தரகண்ட் மாநிலத்தில் இயங்கிவரும் காங்கிரஸ் அரசையும் கலைத்து அங்கு அரசு அமைக்க பாஜக முயன்று வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் முதல்வர் ஹரீஷ் ராவத்துக்கு எதிராக அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேர் பாஜக தூண்டுதலின் பேரில் உத்தரகாண்ட் ஆளுநரை சந்தித்து ஆட்சியைக் கலைக்கக் கோரி மனு அளித்தனர்.அதனைப் பரிசீலித்த ஆளுநர் இன்று சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்வருக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்புக் கொடுக்காமல், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியிருப்பதன் மூலம் பாஜகவின் நோக்கம் நிறைவேறியுள்ளது.
உத்தரகாண்ட் அரசு கலைக்கப்பட்ட உடனேயே பா.ஜ.க. பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா, பா.ஜ.க. அங்கு ஆட்சி அமைக்க உரிமை கோரும் என்று கூறியிருப்பதன் மூலம் பாஜகவின் நோக்கம் வெட்டவெளிச்சமாகியுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தைத் தொடர்ந்து தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனநாயகத்தைக் குழிதோண்டி புதைத்துள்ளது மோடி தலைமையிலான மத்திய அரசு.உத்தரகண்ட் மாநிலத்தில் புறவாசல் வழியாக ஆட்சி அமைக்க முயற்சிக்கும் பா.ஜ.க.வின் சதியை குடியரசுத் தலைவர் முறியடிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்