அதிகம் படிக்கப்பட்ட பதிவு

ஜனநாயகம் ‬ ‬மற்றும்‪ ‪‎மதச்சார்பின்மை கட்டிக்காக்க‪ வழக்கறிஞர்கள்‬ அணிதிரள வேண்டும்! - கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில மாநாடு மற்றும் சட்ட கருத்தரங்கம் நேற்று சென்னை புரசைவாக்கம் ஜவஹர் கிராண்ட் பேலஸில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில தலைவர் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எம்.அப்பாஸ் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் அணியின் மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் நவ்ஃபல் அனைவரையும் வரவேற்றார்.

மேலும், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் நெல்லை முபாரக், மாநில செயலாளர்கள் அமீர்ஹம்ஸா, ரத்தினம், வழக்கறிஞர் அணி நிர்வாகிகள், விமன் இந்தியா பெண்கள் அமைப்பின் தேசிய செயலாளர் சாஹிரா பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநாட்டின் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.ஹரிபரந்தாமன் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய துணை தலைவரும், அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான சர்ஃபுதீன் அஹமது ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

மேலும், மாநாட்டில் சிறப்புரையாற்றிய எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி தனது உரையில், நாட்டில் தற்போது நடைபெற்று வரும் விரும்பத்தகாத நிகழ்வுகளையும் அரசின் மக்கள்விரோத நடவடிக்கைகளையும் குறிப்பிட்டு, ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையை காக்க வழக்கறிஞர்கள் அணிதிரள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றினார்.

பின்னர் புதிய வழக்கறிஞர் அணியின் மாநில நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார். மேலும், மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற சட்ட கருத்தரங்கில் தேசிய மனித உரிமை அமைப்பின் மாநில தலைவர் மூத்த வழக்கறிஞர் பவானி பா. மோகன் தேச துரோகம் என்பதன் சட்ட வரையறை என்ற தலைப்பிலும், வைகை சட்ட நிறுவனர் மூத்த வழக்கறிஞர் டி.லஜபதி ராய் கருத்து சுதந்திரம் என்ற தலைப்பிலும், பகுஜன் சமாஜ்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சா.ரஜினிகாந்த் இந்திய அரசியலமைப்பு சட்டமும், பாராளுமன்ற ஜனநாயகமும் என்ற தலைப்பிலும், எஸ்.டி.பி.ஐ கட்சி வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் வழக்கறிஞர் எ.ராஜா முகம்மது வழக்கறிஞர் அணியின் பணிகளும், எதிர்கால திட்டங்களும் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

மேலும் தமிழ்நாடு பார் கவுன்சில் துணை தலைவர் வழக்கறிஞர் பி.எஸ்.அமல்ராஜ்வாழ்த்துரை வழங்கினார்.இறுதியாக வழக்கறிஞர் அணியின் புதிய மாநில பொருளாளர் வழக்கறிஞர் சுலைமான் நன்றியுரையாற்றினார். இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதிருந்தும் எஸ்.டி.பி.ஐ வழக்கறிஞர் அணி வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

1. தமிழக உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் நியமனத்தில் முஸ்லிம்கள், கிருத்தவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியின சமூகங்களை சேர்ந்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்குவதன் மூலமாக ஒரு சமூக நீதிபின்பற்றப்பட வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ உட்பட பல்வேறு தரப்புகளாலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனவே தமிழக உயர்நீதிமன்றத்தில் 30க்கும் மேற்பட்ட காலியான நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பும் போது மேற்கண்ட நடைமுறையை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு மற்றும் நீதித்துறையை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

2. உயர் நீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலிஜியம் அமைப்பிலும் சமூக நீதி பின்பற்றப்பட வேண்டும். அதாவது கொலிஜியம் அமைப்பில் அனைத்து சமூகங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்கும் போது மட்டுமே அவர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற நீதிபதிகள் நியமனத்திலும் முறையாக அனைத்து சமூக மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்த இயலும் என இம்மாநாடு கருதுகிறது. எனவே நீதித்துறை கொலிஜியம் அமைப்பிலும் மேற்கண்ட முறையில் மாற்றங்களை கொண்டுவர இம்மாநாடு வலியுறுத்துகிறது.

3. சமீபத்தில் தமிழகத்தை சார்ந்த 42 வழக்கறிஞர்களை பணியிடை நீக்கம் செய்து அவர்கள் வழக்கறிஞர் தொழிலை செய்ய பார் கவுன்சில் குறிப்பிட்ட காலம் தடை விதித்துள்ளது. மேற்கண்ட பணியிடை நீக்கத்தை தளர்த்தி 42 வழக்கறிஞர்களும்பணி செய்ய இந்திய பார்கவுன்சில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

4. தமிழக உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை அலுவல் மொழி மற்றும் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு தமிழக உயர் நீதிமன்றங்களில்தமிழ் மொழியை அலுவல் மொழி மற்றும் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

5. அரசியல் அமைப்பு சாசனத்தின் அடிப்படைகளான ஜனநாயகம், மதச்சார்பின்மை ஆகியவை நாட்டினுடைய சமீபத்திய நிகழ்வுகளால் கேள்வி குறியாக்கப்பட்டு மேற்கண்ட கொள்கைகள் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கி உள்ளது எனவே நாட்டின் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையை கட்டிக்காக்க அரசியல் அமைப்பு சட்டத்தின் காவலர்களாக வழக்கறிஞர்களை பணியாற்ற வருமாறு இம்மாநாடு அழைக்கிறது.

6. தேசப்பற்று என்பதன் பெயரால் ஆட்சியாளர்களை விமர்சிப்பவர்களை எதிர்க்கும், தாக்கும் போக்கு என்பது அதிகரித்து வருகிறது. தேசப்பற்றின் வரையறை எது என்பதை தேசத்திற்கு எதிராக தேசத்தின் தலைவர்களை கொலை செய்தவர்கள் கூறுவது என்பது நகை முரணானது. எனவே தேசப்பற்றின் பெயரால் நாட்டின் ஒற்றுமைக்கும், மதச்சார்பின்மைக்கும் ஊறு விளைவிக்கும் கும்பல்களை இம்மாநாடு கண்டிப்பதோடு மேற்கண்டவர்களால் பாதிக்கப்பட்ட எழுத்தாளர்கள், மாணவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அறிஞர்கள் ஆகியோருக்கு இம்மாநாடு தனது ஆதரவை தெரிவிக்கிறது. மேலும் மத்திய மாநில அரசுகள் மேற்கண்ட கும்பல்களின் மீது சட்ட பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள இம்மாநாடு வலியுறுத்துகிறது.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு