டெல்லி பிரதேச இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அய்வானே காலிப் மகாலில் நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 69-வது நிறுவன தின விழாவில் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் கலந்துகொண்டு பேருரையாற்றினார்.
அவர் கூறுகையில், இந்த தேசத்துக்கு இந்துஸ்தான் என பெயர் சூட்டியவர்களே முஸ்லிம்கள் தான்’;
முஸ்லிம் சமுதாயத்திற்கு தேசப்பற்றை பற்றி பாடம் சொல்லும் தகுதி யாருக்கும் கிடையாது என கூறினார்.
டெல்லி பிரதேச இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவராக குர்ரம் அனீஸ் உமர் பொறுப்பு வகித்த போதெல்லாம், அவரைப் பற்றி குறை பேசி வந்தோம். டெல்லியில் முஸ்லிம் லீக் வலிமையாக இல்லையே என்னும் கவலை இருந்துவந்தது. ஆனால், இன்றைக்கு டெல்லி பிரதேச இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மிகுந்த எழுச்சி பெற்றுள்ள அமைப்பாக மாறி இருக்கிறது. இந்த மாற்றத்தை உருவாக்கிய பெருமை குர்ரம் அனீஸ் உமருக்கே உரியது. இப்போது டெல்லி பிரதேச தலைவர் நிஸார் அஹமது ஹுசைன் பொதுச் செயலாளராக இம்ரான் எஜாஸ் மற்றும் குறைஷி சாஹிப், முஹ்னுத்தீன்சாஹிப், நூர் ஷம்ஸ், நிஜாம்சாஹிப் போன்ற நிர்வாகிகள் முஸ்லிம் லீகை பலமுள்ளதாக -எழுச்சிமிக்கதாக உருவாக்கி இருக்கிறார்கள். இவர்களை உருவாக்கியவர் குர்ரம் சாஹிப் என்கிற முறையில் அவரை மீண்டும் பாராட்டுகிறேன்.
டெல்லி பிரதேசத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எழுச்சி பெற்றுள்ளதற்கு மற்றொரு முக்கிய காரணமாக இருப்பது, எம்.எஸ்.எஃப் - முஸ்லிம் மாணவர் பேரவையும், முஸ்லிம் யூத் லீகும் என்றால் மிகையாகாது. நாட்டில் உள்ள மாணவர்களில் பலர் டைனமைட்டுகளாக – வெடிகுண்டுகளாக உலா வருகிற இந்த காலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகைச் சேர்ந்த
எம்.எஸ்.எஃப். மாணவர்கள் டைனமிக்காக-
உணர்வுமிக்கவர்களாக -உணர்ச்சிப் பிழம்புகளாக இருக்கிறார்கள் என்பதற்கு இந்த மாநாடு ஓர் அத்தாட்சியாக இருக்கிறது.
மாணவர்கள் அழிவுப்பாதையில் செல்லாமல், ஆக்கப்பூர்வ காரியங்களில் ஈடுபட வேண்டும்; குழப்பங் களுக்கு காரணமாகி விடாமல், கொள்கைக் குன்றுகளாகத்திகழவேண்டும்; பகைமைக்குவித்திடாமல், பாசத்தையும், நேசத்தையும் வளர்க்கவேண்டும் என்பதால் எம்.எஸ்.எஃப். முன்மாதிரி இயக்கமாக இருப்பதால்தான், இந்தச் சரித்திரம் படைக்கும் மாநாட்டுக்கு எல்லாவித ஒத்துழைப்பு களையும் வழங்கியிருக்கிறார்கள்.
ஜவஹர்லால் பல்கலைக்கழகம், ஜாமிஆ மில்லியா இஸ்லாமியா, டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு கல்லூரிகளின் மாணவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றிருக்கிறார்கள் என்றறிந்து பெரிதும் மகிழ்ச்சி கொள்கிறோம். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தின விழாவோடு, இந்தியாவில் இன்றைய அரசியல் நிலவரம் மற்றும் முஸ்லிம் களின் நிலைமை என்னும் கருத்தரங்கத்தையும் இணைத்த மாநாடாக இது நடைபெறு கிறது.
எனக்கு முன்பு நமது தேசிய தலைவர் இ.அஹமது சாஹிப், டாக்டர் சசிதரூர்எம்.பி., தேசியச் செயலாளர் இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி., ஆல் இண்டியா மஜ்லிஸே முஸாவரத் தலைவர் நவாயத் ஹமீது, இஸ்மாயில், பால்டிவாலா, தேசிய துணைத்தலைவர் இக்பால் அஹமது அட்வகேட், தேசிய துணைச்செயலாளர் என் இனியசகோதரர் எச்.அப்துல் பாஸித், டெல்லி கேரள முஸ்லிம் கல்சுரல் சென்டர் தலைவர் ஹாரிஸ் பீரான், உத்திரப்பிரதேச முன்னணித் தலைவர் மௌலானா கவ்ஸர் ஹயாத், டெல்லி பிரதேச தலைவர் நிஸார் அஹமத் ஹுசைன்,டெல்லி பொதுச் செயலாளர் இம்ரான் எஜாஸ் மற்றும் சகோதரர்கள் மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பான உரைகள் வழங்கியுள்ளனர்.
எல்லாருடைய உரைகளும் மூன்று முக்கிய செய்திகளை கூறியுள்ளன.
இந்திய தேசம் இன்றைக்கு எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள்,
இந்திய முஸ்லிம் சமுதாயம் இன்றைக்கு எதிர் கொண்டுள்ள பிரச்சனைகள் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஆகியவை பற்றி விரிவாகப் பேசியுள்ளனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகே தீர்வு
இந்திய தேசப் பிரச்சனைகளுக்கும், இந்திய முஸ்லிம் சமுதாயம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கும் தீர்வு, இந்திய யூனியன் முஸ்லிம்லீக் என்னும் இந்த சரித்திரம் படைத்த இயக்கத்தை வளர்ப்பதிலும் பலப்படுத்து வதிலும் தான் இருக்கிறது என்பதை தெளிவுபடுத்திட விரும்புகிறேன்.
கடந்த 10-ம்தேதி தமிழகத்தில் உள்ள விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் நிறுவன தின மாநாடும், மஹல்லா ஜமாஅத்துகளின் ஒருங்கிணைப்பு மாநாடும் நடத்தினோம். ஒரு இலட்சத் திற்கும் மேல் மக்கள் கூடினர்.
அதில் உரையாற்றிய இலங்கை அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூஃப் ஹக்கீம் அவர்கள் தனது உரையில் ஒரு முக்கிய மான செய்தியை குறிப்பிட்டுச்சொன்னார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய அரசியலில் எதிரும், புதிருமாக உள்ள அரசியல் இயக்கங்களுடன் உறவை வலுப்படுத்தி, முஸ்லிம் சமுதாயத்திற்கு ஜனநாயகப்பாதையில் சிறப்பான வழிகாட்டுதலை செய்து வருகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இலங்கை முஸ்லிம்களுக்கு முன்மாதிரியான அரசியல் இயக்கமாகத் திகழ்கிறது என்று பெருமிதத்தோடு கூறினார். இத்தகைய தனிச் சிறப்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு கிடைப்பதற்கு அதன் அற்புத வரலாறும், ஆக்கப்பூர்வமான கொள்கைகளும்,திட்டங்களுமே ஆகும்.
1948 மார்ச் 10, புதன்கிழமை சென்னை ராஜாஜி ஹாலில் கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்கள் உருவாக்கிக் கொடுத்த இயக்கம்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக். அதன் தலையாய கொள்கைகள் மூன்று:
ஒன்று, இந்திய தேச ஒற்றுமை- ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது,
இரண்டு, சமூக நல்லிணக்கத்தை நிலை நிறுத்துவது,
மூன்றாவது, சிறுபான்மையினரின் கலாச்சார அடையாளங்களை பராமரிப்பது.
இந்த மூன்று அடிப்படை குறிக்கோள்களையும், கொள்கைகளையும் நிலை நிறுத்துவதற்காகவே சென்ற ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பதினைந்து அம்ச கோரிக்கைபிரகடனம் வெளியிடப்பட்டது.
அந்தக் கோரிக்கைகளில் ஒன்றுதான், இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தில் உள்ள 44-வது பிரிவை நீக்க வேண்டும் என்பது.
பொது சிவில் சட்டம்
இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான பிரிவாக 44 விளங்குகிறது. முஸ்லிம் சிறுபான்மையினர் உயிரினும் மேலாக மதிக்கும் ஷரீஅத் சட்டம், முஸ்லிம் தனியார் சட்டமாக நாட்டில் நடைமுறையில் இருக்கிறது. இந்த தனியார் சட்டத்தை – ஷரீஅத் சட்டத்தை எடுத்து விட்டு எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் ஒரே விதமான சிவில் சட்டத்தைப் பின்பற்ற வேண்டுமென்று சொன்னால், முஸ்லிம்கள் எப்படி முஸ்லிமாகவாழ முடியும்?
இது இந்திய அரசியல் சட்டம் கொடுத்திருக்கும் மத சுதந்திர உரிமைக்கு எதிரானதும், முரணானதும் அல்லவா உள்ளது.
ஆகவே தான், 44-வது பிரிவை நீக்க வேண்டும் என்று கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை நாடு முழுவதிலும் நடத்தி இருக்கிறோம். அந்த கையெழுத்துக்களை திரட்டி, (14-3-2016) இந்திய ஜனாதிபதியிடம் ஒப்படைக் கிறோம். .
இதைப் பற்றி இங்கே இ. டி. முஹம்மது பஷீர் எம்.பி., அவர்கள் மிகத் தெளிவாக எடுத்துக் கூறியிருக் கிறார்.
இந்திய முஸ்லிம்களுக்கு தேசப்பற்று பற்றி பாடம் நடத்துவதற்கு சில சக்திகள் நாட்டில் முனைந்து வருகின்றன.
இந்தியாவை இந்துஸ்தான் என்று பெயர் சூட்டியவர்களேமுஸ்லிம்கள்தாம். இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் எடுத்துக் கூறி வரும் சமுதாயம் முஸ்லிம் சமுதாயம்.
திருமதி இந்திராகாந்தி ஆட்சியின் போது, பூமியைச்சுற்றி ராக்கெட் செலுத்தப்பட்டது. ராகேஷ் சர்மா ராக்கெட்டில் பயணித்தார்.
வானத்தில்இருந்து பூமியை –இந்தியாவை பார்த்து வந்த ராகேஷ் சர்மாவிடம் இந்திராகாந்தி, கய்ஷா ஹை ஹமாரா தேஷ்? –
நமதுநாடு எப்படி இருக்கிறது? என்று கேட்கிறார்.
‘ஸாரேஜஹான்ஸே அச்சா’ – என்று ராகேஷ் சர்மா கூறினார்.
விண்ணில் பறக்கும் போது, இந்திய மண்ணின் பெருமையை பேசுவதற்கு ஒரு முஸ்லிம் புலவனின் – மகாகவி இக்பால் அவர்களின் கவிதை தான் நினைவுக்கு வந்ததே தவிர, வேறு எவர் எழுதியதும் அவர் நினைவுக்கு வரவில்லை!
இந்தியாவின் பெருமையை வையகம் முழுவதிலும் பெருமைப்படுத்திக் கொண்டிருக்க முஸ்லிம் சமுதாயத்திற்கு தேசப்பற்று பற்றி பாடம் சொல்லும் தகுதி யாருக்கும் கிடையாது!
இறையருள் இல்லம்
இந்திய தேசத்தில், சமீபத்தில் வெளியான மனிதஇயல் துறை வெளியிட்ட அறிக்கை யின்படி 4636 வகுப்புகள் இருக்கின்றன. ஒரு வகுப்பை - ஒருசாதியை - ஒரு மதத்தை, பிற வகுப்பின் மீது, பிற சாதியின் மீது, பிற மதத்தின் மீது ஆதிக் கம் செலுத்த அனுமதித்தால் சமூக நல்லிணக்கம் நிலைக்காது.
எல்லா சமயங்களுடனும் நல்லுறவும், நல்லிணக்கமும் கொண்டு வாழ்வதற்கான வழி முறைகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பின்பற்றி வருகிறது.
வகுப்புக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸப்பர் நகர் என்றாலும்,
அஸ்ஸாம் என்றா லும் அங்கெல்லாம் பைத்துர்ரஹ்மா -
இறையருள் இல்லம் உருவாக்கும் திட்டம் அமுலாக்கப்பட்டு வருகிறது.
கேரளாவில் முஸ்லிம், இந்து, கிறிஸ்துவர் என்று மதவேறுபாடு பாராமல் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இறையருள் இல்லங்கள் உருவாக்கப்பட்டு அளிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித் தரும் திட்டத்தை சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் மார்ச் 14-ல் துவக்குகிறார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழக முன்னணித் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
சிறுபான்மையினரின் - குறிப்பாக முஸ்லிம்களின் கலாச்சார அடையாளங்களை பாதுகாப்பது நமது கடமை யாகும். மஸ்ஜிது, மஹல்லாஜமாஅத், கபரஸ்தான், வக்ஃபு, ஷரீஅத், இஸ்லாமிய வாழ்வு முறையாகவும், ஹஜ்ஜும், நோன்பும், ஜகாத்தும் நமது கலாச்சார அடையாளங்கள் ஆகும்.
அவைகளுக்கு வரும் ஆபத்துகளில் இருந்து பாது காப்பது மூலமே முஸ்லிம்கள் தங்களின் தனித்தன்மைகளை நிலை நிறுத்த முடியும். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பதினைந்து அம்ச கோரிக்கை களை எல்லாருடைய கவனத்துக்கும் பரப்புரை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
டெல்லி பிரதேசத்தில் இது போன்ற மாநாடுகள், குறைந்தது ஐந்து பகுதிகளிலா வது நடத்தப்பட வேண்டும். அதற்கான முயற்சியில் நீங்கள் ஈடுபட வேண்டும். தேசத் தலைநகர் டெல்லியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அலுவலகம் ஒன்றை விரைவில் உருவாக்கித் தர இருக்கிறோம். முஸ்லிம் லீகின் செயல் திட்டங்களை விரைவு படுத்துவதற்கு அது மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். இங்கே உரையாற்றிய சகோதரர்களில் சிலர், பசுமாட்டை ஆயுதமாக்கி, அரசியல் நடத்தும் பாஸிச போக்குகளை பற்றி குறிப்பிட்டார்கள். ஆடு, மாடுகளையும், ஆயுதங்களையும் ஏந்தி அரசியல் நடத்துவோர்க்கு மத்தியில், முஸ்லிம்களும் ஆயுதம் ஏந்துவது கிடையாது. குத்தீட்டிகளையும், குண்டுகளையும் ஏந்துமாறு குர்ஆன் கூறவில்லை.
“ஜாஹித் ஹும் பிஹிஜிஹா தன் கபீரா” – குர்ஆனை ஏந்தி போராடுவதுதான்,
போராட்டங்களிலேயே மிகப் பெரிய போராட்டம் என்றுதான் குர்ஆன் ஷரீப் கூறுகிறது.
முஸ்லிம்களுக்கும் - முஸ்லிம் லீகர்களுக்கும் எனது பணிவான வேண்டுகோள் இதுதான்!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதித் தூதர் ஆவார்கள். அவர்களுக்குப் பிறகு நபி எவரும் வரப் போவதில்லை. நிஜாமுத்தீன் சிஸ்தி (ரஹ்) போன்ற வலியுல்லாஹ் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் கூறிய கொள்கைகளையும், நடைமுறைகளையும் உலகமக்களுக்குச் சொல்ல வேண்டிய கடமை நமக்குத் தான் இருக்கிறது.
அந்தக் கடமையைச் சிறப்பாகவும், செவ்வையாகவும் செய்வதற்கு,
குர்ஆன் ஷரீபை வலக்கரத்திலும்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கொள்கை, கொடியினை இடக்கரத்திலும் ஏந்துங்கள்! மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள்!
மக்களின் உள்ளங்களை வெல்லுங்கள்!
நம்மை வெறுக்கிறவர்களும் நம்மை விரும்புவோராக மாறுவார்கள்!
நமது பரப்புரையை வரவேற்கும் மக்கள் நம் மீது அன்பும், பாசமும் கொள்வார்கள்!
நம்மை மதித்துப் போற்றுவார்கள்!
அமைதி வழியில் ஆக்கப் பணிபுரியும் சமுதாயத்தை எல்லா மக்களும் ஏற்றிப்போற்றுவதுடன் அல்லாமல், உங்களின் தலைமையை ஏற்பதற்கும் முன்வரும் காலம்கனிந்து வரும்! –
இவ்வாறு பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் தனது மாநாட்டு நிறைவுரையில் கூறினார். பேராசிரியர் ஆங்கில உரையை தேசிய துணைத் தலைவர் அட்வகேட் இக்பால் அஹமது சாஹிப் உர்தூவில் மொழிபெயர்த்தார். அவருக்கு பேராசிரியர் நன்றி தெரிவித்தார்.
தேசிய செயலாளர் குர்ரம்அனீஸ் உமர் நன்றி கூறினார். மௌலானா மஜ்ஹருல்லாஹ்துஆவுடன் மாநாடு நிறைவு பெற்றது.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்