தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் களம் மெதுவாக சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தற்போது கோவையில் தேர்தல் பிரசார வாகனங்கள் தயாராக தொடங்கியுள்ளன.
கோவை சிவானந்தா காலனியில் உள்ள தனியார் நிறுவனம் பிரசார வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து அந்த தனியார் நிறுவன ஊழியர்கள் கூறியதாவது:-
அ.தி.மு.க தேர்தல் பிரசாரத்துக்காக நவீன வசதிகளுடன் வேன் ஒன்று தயாராகிறது. இது தவிர தி.மு.க., காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்துக்காக வாகனங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
அ.தி.மு.க.வுக்காக தயாராகும் வேனில், 12 பேர் பயணிக்கலாம். இதன் முன்புற இருக்கைகள் சுழலும் வகையிலும், மேலும், கீழும் இயங்கும் வகையில் ஹைட்ராலிக் லிப்ட் பொருத்தப்பட்டுள்ளது.
தி.மு.க. பிரசார வேனில், இருக்கையை எளிதாக ஏற்றி இறக்கவும் 10 பேர் அமர்ந்து செல்லும் வகையிலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி, மைக்ரோவேவ் ஓவன், குளிர்சாதன பெட்டி, கட்டில், மெத்தை, சிகையலங்கார அலமாரி, ஏ.சி, எல்.இ.டி. டிவி, வெஸ்டன் மாடல் கழிவறை, குளியல் அறை, நீர் சேமிப்பு தொட்டி என பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் படுத்து ஓய்வு எடுக்கும் வகையில் இருக்கைகளையே படுக்கையாக மாற்றும் வசதியும் செய்யப்படுகிறது.
மேலும் இந்த பிரசார வேனில் நின்று கொண்டு பிரசாரம் செய்வதற்கு வசதியாக, வேனில் நடுப்பகுதியில் தானியங்கி சிறிய மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. இரவு வேளையில் திறந்த நிலையில் நின்று பிரசாரம் செய்வதற்கு வசதியாகவும், பகல்வேளையில் பிரசாரம் செய்யும்போது வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் குடைபோன்ற கூரையும் சேர்த்து வடிவமைக்கப்படுகிறது. பிரசார வேனில் ஒரே நேரத்தில் 3 பேர் நின்றவாறு பிரசாரம் செய்வதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்