மனிதநேய ஜனநாயக கட்சியின் அரசியல் மறுமலர்ச்சி மாநாடு எதிர்வரும் மார்ச் 26 , 2016 சனிக்கிழமை அன்று சென்னை OMR சாலையில் உள்ள YMCA திடலில் நடைபெறவிருக்கிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் இம்மாநாட்டில் பங்கேற்கவிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான வாகனங்களை நிறுத்த பல்வேறு கல்லூரிகள் மற்றும் பள்ளிக்கூட மைதானங்கள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இரவு புறப்பட்டு காலை வந்து சேரும் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தங்குவதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. மாநாட்டு மைதானத்தில் புத்தக கடைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
மாநாட்டு திடலுக்கு கலீபா உமர் அவர்களின் பெயரும் , மேடைக்கு காயிதே மில்லத் அவர்களின் பெயரும், பெண்கள் பகுதிக்கு அன்னை. தெரஸா அவர்களின் பெயரும், இரண்டு நுழைவுவாயில்களுக்கு ஒன்றுக்கு ஐயா பெரியார் அவர்களின் பெயரும், இன்னொன்றுக்கு மாணவர் போராளி ரோஹித் வெமுலா அவர்களின் பெயரும், திடல் வரவேற்பு வளைவுக்கு மவ்லவி அப்துல் ரஹீம் அவர்களின் பெயரும் சூட்டப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகிகள் உரையாற்றுகிறார்கள் . மாவட்ட செயலாளர்கள் , அணிகளின் மாநில செயலாளர்கள் , செயற்குழு உறுப்பினர்கள் தீர்மானங்களை முன்மொழிந்து உரையாற்றுகிறார்கள் .
இம்மாநாட்டில் அ.இ.அ.தி.மு.க வின் சார்பில் அனைத்துலக MGR நற்பணி மன்ற செயலாளரும் , தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவருமான தமிழ்மகன் உசேன் , இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் , சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் R. சரத்குமார் , பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் P.V.கதிரவன் , தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி. வேல் முருகன் , கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனர் U. தனியரசு , இந்திய யூனியன் காயிதேமில்லத் லீக்கின் தலைவர் தாவூத் மியாகான் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் கூறினார்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்