கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த வந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்திக்க விஜயகாந்த் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
தமிழக சட்டப் பேரவை நிகழ்வுகள் நாள்தோறும் பல்வேறு திருப்பங்களை சந்தித்து வருகிறது. வரவிருக்கும் தேர்தலில் திமுகவும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து போட்டியிடுவது என முடிவு செய்துள்ள நிலையில் பல கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யவில்லை.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் யார் பக்கம் செல்வார் என்ற எதிர்பார்ப்பு நாள்தோறும் அதிகரித்து வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தினார்.
சுமார் ஒரு மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜவடேகர், கூட்டணி குறித்து விஜயகாந்துடன் முழுமையாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தை மகிழ்ச்சிகரமாக இருந்தது. மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு புதன்கிழமை மீண்டும் வருவேன் என்றார்.
இச்சந்திப்புக்கு பின் தேமுதிக சார்பில் வெளியிடப்பட்ட புகைப்பட விளக்கத்தில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருடன் `மரியாதை நிமித்தமான சந்திப்பு' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதற்கு விஜயகாந்த் சம்மதம் தெரிவித்துவிட்டதாக நேற்று தகவல்கள் பரவின. மேலும், திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 59 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 40 இடங்களும் வழங்குவதற்கு உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இன்று மீண்டும் சென்னை வந்த ஜவடகேரை சந்திப்பதற்கு விஜயகாந்த் மறுப்பு தெரிவித்துவிட்டதாகத் தெரிகிறது.
விஜயகாந்த் இன்று திடீரென்று விருத்தாசலம் புறப்பட்டு சென்றுவிட்டாராம். மேலும், தமிழக பாஜகவினர் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவை சந்திக்க முயன்றுள்ளனர். பிரேமலதாவும் அமைச்சரை சந்திக்க மறுத்து அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும் போது, விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு செல்வது உறுதியாகவிட்டதாகவே தெரிகிறது.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்