மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள கண்டியூரில் நேற்று (13.7.2016) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 60க்கு மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமடைந்து அவ்விபத்தில் மாற்றுத்திறனாளிஎஸ். ஷேக் அலாவுதீன் உயிரிழந்தார் என்ற செய்தி வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இந்த விபத்துச் செய்தி அறிந்தவுடன் மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளர் தஞ்சை பாதுஷா தலைமையிலான தமுமுக மற்றும் மமகவின் மீட்புக் குழுவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு, விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
தற்போது பாதிக்கப் பட்டவர்களுக்கு உரிய நிவாரணங்களை அக்குழுவினர் அளித்து வருகின்றனர். தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு வழங்கியுள்ள உணவு மற்றும் உடைகள் போன்ற நிவாரணம் போதுமானதாக இல்லை என அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.தீ விபத்தில் வீடு, ரொக்கம், வீட்டு உபயோகப் பொருட்கள் திருமணத்திற்காகசேர்த்து வைக்கப்பட்ட நகைகள் என அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளதால் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட மக்கள் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு இதுபோன்ற இக்கட்டான தருணங்களில் வழங்கப்படும் நிவாரணத்தையும் தாண்டி மனிதாபிமான அடிப்படையில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.20 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும், உயிரிழந்த மாற்றுத்திறனாளி எஸ்.ஷேக் அலாவுதீன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்