அதிகம் படிக்கப்பட்ட பதிவு

"இஸ்லாம் எங்கள் வழி, இன்பத்தமிழ் எங்கள் மொழி" - தமிமுன் அன்சாரி MLA

தமிழக பத்திரிக்கையாளர் சங்கம் (TUJ) சார்பில் சென்னை-இம்பிரியல் ஹோட்டல் ஹாலில் "இதயங்களை இணைக்கும் விழா" என்னும் பெருநாள் ஈத்மிலன் நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இந்திய முஸ்லிம்கள் இம்மண்ணிலே பிறந்து, இங்கேயே வளர்ந்து இந்த மண்ணிலேயே மறித்தும் போகிறார்கள். நாங்கள் எத்தியோபியாவில் இருந்தோ, சவூதி அரேபியாவில் இருந்தோ வந்தவர்கள் அல்லர்.எங்கள் முப்பாட்டன்கள் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டனர். அவர்கள் பிராமணர்களாகவோ, தலீத்தாகவோ,வன்னியராகவோ, தேவராகாவோ இன்னும் பிற சமூக மக்களாகவோ இருந்து இருக்கலாம். அவர்களை இஸ்லாம் ஈர்த்தது.

நாங்கள் கொள்கையால் முஸ்லிம்கள், மொழியால் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள், தேசத்தால் இந்தியர்கள் எனவே தான் "இஸ்லாம் எங்கள் வழி,இன்பத்தமிழ் எங்கள் மொழி" என்றும் "இந்தியா எங்கள் தாய்நாடு, இஸ்லாம் எங்கள் வழிப்பாடு" என்று முழங்குகிறோம்.

எங்கள் தேசப்பற்றை நெஞ்சை பிளந்து காட்டமுடியாது. சுதந்திர போராட்டத்தை முதலில் தொடங்கியவர்கள் முஸ்லீம்கள்,தேசபக்திக்கு யாரிடமும் சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இல்லை.

வரலாறு நெடுகிலும் நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகிறோம். ராஜேந்திர சோழன் மலாயவின் மீது படையெடுத்த போது, அவனுக்கு வழிக்காட்டி மாலுமிகளாக செயல்ப்பட்டது முஸ்லிம்கள் என்பதும், பாண்டிய மன்னனின் வணிகக்குழுவுக்கு சீனாவுக்கு தலைமையேற்று சென்றதும் முஸ்லீம்கள் என்பதும் வரலாறு.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, அயோத்தியில் உள்ள முஸ்லிம்களை பாதுக்காத்தது இந்துக்கள் தான். 90 சதவிகித இந்துக்கள் மதநல்லிணக்கத்தை பேணிக்காக்க கூடியவர்களாக இருக்கின்றனர். எனவே மதவாத சக்திகளால் எங்களுக்கு பயமில்லை.சமூக நல்லிணக்கத்திற்கு சீர்குலைப்பவர்களுக்கு எதிராக அணிதிரள வேண்டும்.

இஸ்லாம் அமைதி மார்க்கம், அது பயங்கரவாதத்தை எதிர்க்கிறது. ஆனால் உரிமை போரட்டத்தை ஆதரிக்கிறது. இரண்டும் ஒன்றல்ல I.S பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம், அது மொசாத்தின் கள்ளக்குழந்தையாகும்.

நபிகள் நாயகத்தின் போதனைகளுக்கு, குர்ஆனுக்கும் எதிரான அமைப்பு I.S. அமைப்பாகும்.எனவே அதை இஸ்லாத்தோடும், முஸ்லிம்களோடும் தொடர்புபடுத்த வேண்டாம்.

இது போன்ற அரசியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சிகளை, சமூக நல்லிணக்கத்திற்காக அனைவரும் நடத்த வேண்டும். அதை முன்னெடுத்த தமிழக பத்திரிக்கையாளர் சங்கத்தை மனமார பாராட்டுகிறேன்.

இவ்வாறு மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தர்மபுரம் ஆதினம் ஸ்ரீமத் குமாரசாமி தம்பி பிரான் சாமிகள், தா.பாண்டியன்,எஸ்.எம்.பாக்கர்,தெஹ்லான் பாகவி, MGK நிஜாமுதீன், வசீகரன், பேராயர் எஸ்ரா.சற்குணம், தைமியா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். பல்வேறு சமுதாயங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு