அதிகம் படிக்கப்பட்ட பதிவு

நெல்லை மாவட்டம் தனியார் தோட்டத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்



புளியங்குடி:

சிவகிரி அருகே தனியார் தோட்டத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான சந்தன மரங்களை ஒரு கும்பல் வெட்டி கடத்தி சென்றனர். இந்த சம்பவத்தில் வனத்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடக்கிறது. நெல்லை மாவட்டம் சிவகிரி வடக்குரதவீதியை சேர்ந்தவர் ரகுராமன் (வயது 50). இவர் அங்குள்ள பஸ்நிலையம் அருகே ஜவுளி கடை நடத்தி வருகிறார். மேலும் மேற்குதொடர்ச்சி மலை செல்லும் வழியில் இவருக்கு சொந்தமான 7 ஏக்கரிலான கொய்யா தோட்டம் உள்ளது. தோட்டத்தின் சுற்றுப்பகுதியில் வனத்துறை அனுதிபெற்று சந்தனமரம் மற்றும் தேக்கு மரக் கன்றுகள் பராமரித்து வந்தார். இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி நள்ளிரவு மர்ம நபர்கள் தோட்டத்தில் புகுந்துள்ளனர்.

பின்னர் அவர்கள் நவீன எந்திரத்தை பயன்படுத்தி அங்குள்ள 4 சந்தனமரங்களை வெட்டி கடத்திச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். ஏற்கனவே இவரது தோட்டத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்ட முயற்சி செய்துள்ளனர். அப்போது ஆள்நடமாட்டம் காரணமாக கடத்தல் முயற்சி தடுக்கப்பட்டது. இதுகுறித்து ரகுராமன், சிவகிரி வனத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார்.

சிவகிரி பகுதியில் வனத்துறை அனுமதி பெற்று தனியார் தோட்டங்களில் சந்தனம் மற்றும் தேக்கு மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதுதவிர அரசு புறம்போக்கு இடங்களிலும் வனத்துறை சார்பில் சந்தனமரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக மர்நபர்கள், தனியார் தோட்டம் மற்றும் புறம்போக்கு இடங்களில் உள்ள சந்தன மரங்களை வெட்டி கடத்தி வருகின்றனர்.

ஆகவே, சந்தனமரம் கடத்தல் கும்பலுடன் வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே மாவட்ட வன அலுவலர் விசாரணை நடத்தி சந்தன மரம் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன் உடந்தையாக செயல்படும் வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு