அதிகம் படிக்கப்பட்ட பதிவு

ஜே.என்.யூ. மாணவர் நஜீப் அகமது காணாமல் போன விவகாரம் - நீதி வேண்டி எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்!

டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தின் விடுதி நிர்வாகிகள் தேர்தல் தொடர்பாக, பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி மாணவர் அமைப்பினரால், எம்.எஸ்சி. உயிரி தொழில்நுட்பம் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவர் நஜீப் அகமது தாக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த 15ம் தேதி முதல் நஜீப் காணாமல் போனார். 10 நாட்களுக்கு மேலாகியும் அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடியும் நஜீப் பற்றிய தகவல் தெரியவில்லை.

நஜீப் காணாமல் போனதற்கு ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாணவர்கள் தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மாயமான நஜீப்பை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாஜகவின் ஏபிவிபி அமைப்பினரை கண்டித்தும், தாக்குதலுக்கு ஆளான நஜீப் அகமதுக்கு நீதி வேண்டியும், மர்மமான முறையில் மாயமான நஜீப் அகமதை கண்டுபிடிக்கக் கோரியும் SDPI கட்சியின் சார்பாக டெல்லி ஜந்தர்-மந்தரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர் நஜீப் அகமதுவின் தாயார் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். மேலும், எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பொதுச் செயலாளர்கள் முகமது ஷஃபி, இலியாஸ் முகமது தும்பே, தேசிய துணைத் தலைவர் அட்வகேட்.ஷர்ஃபுதீன், டெல்லி மாநில நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

அப்போது இவ்விவகாரத்தில் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும், மாணவர் நஜீபை விரைவாக கண்டுபிடிக்க வேண்டும், நஜீப் காணாமல் போனதில் தொடர்புடைய  ஏபிவிபி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், சிறுபான்மை மாணவர்கள் குறிப்பாக முஸ்லீம் மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் அவர்கள் அப்போது கவலை தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு