அதிகம் படிக்கப்பட்ட பதிவு

மேலப்பாளையம் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற மதமுமுகவினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு!

இன்று மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நெல்லை மாவட்ட பொருளாளர் M. ஆலியப்பா தலைமையில் மேலப்பாளையம் பகுதி நிர்வாகிகள் கரிம், குதாமுகம்மது, பாதுஷா, சகாபுதீன் ஆகியோர் மாவட்ட ஆட்சி தலைவரிடம் கொடுத்த புகார் மனு வருமாறு,

பொதுமக்களுக்கு இடையூறாகவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கொள்கை முடிவிற்கு எதிராகவும் உள்ள மேலப்பாளையம் டாஸ்மாக் மதுக்கடை எண்:10654 ஐ அப்புறப்படுத்த கோரி புகார் மனு.

1) திருநெல்வேலி மாநகராட்சி பகுதியான மேலப்பாளையம் சந்தை முக்கு பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள டாஸ்மாக் (கடை எண்:10654) கடை பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. இக்கடைக்கு அருகில் ஏராளமான வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் பெண்கள் குழந்தைகளுக்கு இக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்களால் மிகவும் இடையூறும் அச்சுறுத்தலும் இருந்து வருகிறது. குடிகாரர்கள் மது அருந்திவிட்டு அப்பகுதியில் நின்றுக்கொண்டு ஆபாச வார்த்தைகளால் பேசுவதும் உடையில்லாமல் நிர்வான நிலையில் ரோட்டில் உருண்டு பிரள்வதுமாக உள்ளனர். இதனால் பெண்கள் நடமாட முடியாமல் மிகவும் அச்சத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

2) இக்கடைக்கு எதிரே அலிய்யா பள்ளிவாசல் மற்றும் மதரஸா உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் தொழுகைக்கு வந்து செல்கின்றனர், இங்குள்ள மதரஸாவில் ஏராளமான மாணவர்கள் தங்கி மார்க்க கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளிவாசலுக்கு வருகின்றவர்களுக்கு இங்குள்ள மாணவர்களுக்கும் இந்த மதுக்கடையால் மிகுந்த இடையூறு உள்ளது.

3) இக்கடைக்கு எதிர்புறம் பஸ் நிறுத்தம் உள்ளது. தினமும் இந்த நிறுத்தத்திலிருந்து ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்டவர்கள் கல்வி நிலையத்திற்கும் வேலைக்கும் சென்று வருகின்றனர். இக்கடை இங்கு இருப்பதால் மக்கள் மிகவும் சங்கடத்தையும் பல பிரச்சனைகளையும் சந்தித்து வருகின்றனர்.

4) இந்த மதுக்கடையால் இப்பகுதியில் மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும் அடிக்கடி கடை முன்பு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் உருவாகி வருகிறது.

5) மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கடைகளையும் பேருந்து நிலையத்திற்கு வழிபாட்டுத் தலத்திற்கும் மக்கள் குடியிருப்பிற்கும் அருகில் உள்ள கடைகளை அரசு தாமாக முன்வந்து அகற்றும் என கொள்கை முடிவு எடுத்து அறிவித்து நடைமுறைப்படுத்தி உள்ளார்கள். மேற்கண்ட விதிமுறைகள் அனைத்தும் இக்கடைக்கு பொருந்தும் (பள்ளிவாசல், பேருந்து நிறுத்தம், குடியிருப்பு உள்ளது) ஆனாலும் அரசு அதிகாரிகள் முன் வந்து இக்கடையை எடுக்காதது வேதனையளிக்கிறது. எனவே இப்புகார் மனுவை ஏற்று கடையை அப்புறப்படுத்த வேண்டுகிறோம்.

6) மேலப்பாளையம் ஊரில் சிறுபான்மை சமுதாயமான முஸ்லிம்கள் நிறைந்து வாழும் ஊராகும். இவ்வூரில் உள்ள முஸ்லிம்கள் 99.99% சதவீதம் நபர்கள் குடிப்பழக்கம் இல்லாதவர்கள். மனிதர்களுக்கு மது கேடு விளைவிக்கும் என்பதால் இஸ்லாம் மதுவை தடை செய்துள்ளதால், மார்க்க சமய இறை வழிபாட்டில் சிறந்து விளங்கும் மேலப்பாளையம் மக்கள் யாரும் மது அருந்துவது இல்லை. இம்மதுக்கடைக்கு சென்று மது வாங்குவதும் இல்லை. மாறாக வெளியூர் வாசிகள் தான் இங்கு வந்து மது வாங்குகிறார்கள். ஆகவே அந்தந்த பகுதியில் மதுக்கடைகள் இருக்கும்போது இந்த மதுக்கடை தேவையற்றது ஆகும்.  இது ஊர் மக்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

ஆகவே மேற்கண்ட டாஸ்மாக் கடையை இங்கு இருந்து அப்புறப்படுத்த கேட்டுக் கொள்கிறோம் என்று கூறினர்.

மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் கடையை அகற்ற தேவையான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு