அதிகம் படிக்கப்பட்ட பதிவு

மீத்தேன் எரிவாயு திட்டம் நிரந்தரமாக ரத்து! தமிழக விவசாயிகளின் எழுச்சிக்கு கிடைத்த வெற்றி!!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:

காவேரி டெல்டா பகுதிகளில் உள்ள நிலக்கரி படுகைகளிலிருந்து மீத்தேன் எடுக்கும் திட்டம் கடந்த 2010ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு தனியார் நிறுவனம் மூலம் அதற்கான பணிகளில் மத்திய அரசு மும்முரமாக ஈடுபட்டு வந்தது.
இந்த நாசகரமான திட்டத்தால் காவிரி டெல்டா பகுதி முழுவதும் பெரும் அழிவை சந்திக்கும் என விவசாயிகள், மனிதநேய மக்கள் கட்சி உட்பட அனைத்து அரசியல் கட்சிகள் என அனைத்து தரப்பினரும் எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர்.

மீத்தேன் திட்டம் சம்பந்தமாக தமிழக சட்டமன்றப் பேரவையில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக பலமுறை தமிழக அரசு கோரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் மானியக் கோரிக்கையின் போது மனிதநேய மக்கள் சார்பில் உரையாற்றிய நான் “மீத்தேனை நிலத்தடியின் கீழேயிருந்து எடுத்து நம்முடைய விவசாய பூமியை மலடாக்க வேண்டாம். தமிழகத்திலே, மீத்தேனை எடுக்கும் திட்டத்தினை நிரந்தரமாக தடுப்பதற்கு வேண்டிய நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தமிழக அரசை வலியுறுத்தியதன் அடிப்படையில் தமிழக அரசும் அதனை ஆய்வு செய்ய குழுவும் அமைத்தது.

அதேபோல் கடந்த 20.02.2015 அன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கான விவாதித்தில் “இந்த மீத்தேன் திட்டம் எப்படிப்பட்டது? அது சாதகமானதா, பாதகமானதா என்பதை ஆய்வு செய்வதற்காக வேண்டி ஒரு குழுவை தமிழக அரசு நியமித்தது. அந்தக் குழுவினுடைய அறிக்கை என்ன என்பதையும் நான் அறிய விரும்புகின்றேன். அதுமட்டுமல்லாமல் இந்த மீத்தேன் திட்டம் தமிழகத்திலே இருக்கக்கூடாது. காவேரி படுகைப் பகுதி முழுமையாக ஒரு வேளாண்மை பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்கப்பட வேண்டும். Great Eastern Energy Corporation மட்டுமல்ல O.N.G.C.யும் கூட அந்த ஆய்வை செய்கின்றது. இப்போது காவேரி படுகைப் பகுதியைத் தாண்டி சிவகங்கை, இராமநாதபுரத்திலும் அந்த ஆய்வுகள் நடப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த அரசு ஒட்டுமொத்தமாக அந்தத் திட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்று இந்த நேரத்திலே நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்தினேன் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இந்நிலையில் தற்போது மத்திய அரசு இத்திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கது.

இதேபோல், புதிதாக அறிவித்துள்ள கூடங்குளம் அணுஉலை திட்டம், நியூட்ரினோ திட்டம் போன்ற நாசகர திட்டங்களை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு