இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
இஸ்லாமிய பிரச்சாரகர் டாக்டர் ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேசன் நிறுவனத்திற்கு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது மத்திய அரசு. மத்திய அரசின் இந்நடவடிக்கை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதப் பிரச்சார உரிமையை அச்சுறுத்தி ஒடுக்கும் நடவடிக்கையாகும்.
இந்தியா மட்டுமின்றி உலகின் பல பகுதிகளிலும் இஸ்லாமிய பிரச்சார பணிகளை மேற்கொண்டு வரும் ஜாகிர் நாயக் அவர்களின் உரை பயங்கரவாதத்தை தூண்டுகிறது என்ற அனுமானத்தின் அடிப்படையில், அவரின் நிறுவனத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது கண்டனத்திற்குரியது. உலகின் பல நாடுகளின் அமைதிக்கான விருதினை பெற்ற ஜாகிர் நாயக் அவர்கள் உரை பயங்கரவாதத்தை தூண்டுகிறது என்ற பாஜக அரசின் குற்றச்சாட்டு நகைப்பிற்குரியது மட்டுமின்றி, சிறுபான்மையினரை திட்டமிட்டு நசுக்கும் நடவடிக்கையாகும்.
பயங்கரவாதத்திற்கெதிராக கொண்டுவரப்பட்ட யு.ஏ.பி.ஏ. என்ற சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டமானது, முந்தைய தடா, பொடா சட்டங்களைப் போன்று தலித். பழங்குடியினர் மற்றும் சிறுபான்மை மக்களை ஒடுக்கவே பயன்படுத்தப்படும் என்ற குற்றச்சாட்டு தற்போது நிரூபணமாகி வருகின்றது.
நாட்டில் நடைபெற்ற பல்வேறு குண்டுவெடிப்புகள், பகுத்தறிவாளர்கள் கொலைகளில் தொடர்புடைய அபினவ் பாரத், சனாதன் சன்ஸ்தா அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கவோ, தடை செய்யவோ மத்திய அரசு எந்த ஒரு துரும்பையும் அசைக்கவில்லை. மாறாக, இக்குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய பயங்கரவாதிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளையும், அவர்களை சிறையிலிருந்து விடுவிக்கும் நடவடிக்கைகளையும் என்.ஐ.ஏ. விசாரணை அமைப்பின் மூலம் செய்துவருகின்றது.
மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்த நாள் முதல், தொடர் மக்கள் விரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதைப் போன்று, தொடர் சிறுபான்மை விரோதப் போக்குகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒன்றிலிருந்து ஒன்றை மறைக்க அல்லது மக்களின் கவனத்தை திசை திருப்ப இதுபோன்ற யுக்திகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. அந்நடவடிக்கையின் தொடர்ச்சியாகத் தான் டாக்டர் ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேசன் மீதான 5 ஆண்டுகள் தடையும் அமைந்துள்ளது. ஏற்கனவே, இந்திய அரசியலமைப்பு சட்டம் தந்துள்ள மத நம்பிக்கைகளை பின்பற்றும் அடிப்படை உரிமையை பறிக்கும் முகமாக பொது சிவில் சட்ட விவாதத்தை கிளப்பியுள்ள மத்திய பாஜக அரசு, தற்போது இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள மதப்பிரச்சாரம் செய்யும் உரிமையையும் கேள்விக்கு உட்படுத்தி அதனை பறிக்கும் வகையில், நிரூபிக்கப்படாத போலியான குற்றச்சாட்டுகளின் பேரில் டாக்டர் ஜாகிர் நாயக்கின் நிறுவனத்தின் மீது தடை நடவடிக்கை எடுத்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத் தக்கது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் குரல் எழுப்ப வேண்டும். போலியான குற்றச்சாட்டுகளில் பேரில் சிறுபான்மை மக்களை, நிறுவனங்களை ஒடுக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்வதோடு, இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேசன் மீதான தடையை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்