அதிகம் படிக்கப்பட்ட பதிவு

தமுமுகவின் மாநில பொதுக்குழு தீர்மானங்கள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய இரண்டு நாட்கள் தின்டுக்கலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அனைத்து மாநில நிர்வாகிகளும், மாநில செயற்குழு உறுப்பினர்களும் மற்றும் முக்கிய மாவட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். மேலும் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் கீழ் வருமாறு,

தீர்மானம் 1 - "பாபரி மஸ்ஜித்"

உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி டிசம்பர் 6 1992ல் பாபர் மஸ்ஜித் பட்டப்பகலில் பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டது. இடிக்கப்பட்ட பள்ளிவாசல் ஓராண்டுக்குள் கட்டித்தரப்படும் என்றுமத்திய அரசாங்கம் அளித்த வாக்குறுதி இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. லிபரான் ஆணையத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பாபர் மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகள் யாரும் தண்டிக்கப்படவில்லை. பாபரி மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும், மஸ்ஜித் இடிப்புக் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும், பாபரி மஸ்ஜித் வழக்கில் உச்சநீதிமன்றம் விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும் என்ற அடிப்படை கோரிக்கையை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. இதை வலியுறுத்தி பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிசம்பர் 6 அன்று தமுமுக கருஞ்சட்டை அணிந்து நடத்தும் தர்ணா போராட்டத்தில் பெருந்திரளாக மக்கள் ளை பங்கேற்க வேண்டும் எனவும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 2 - "போபால் போலி என்கவுன்டர்"

போபால் மத்தியச் சிறையிலிருந்து எட்டு முஸ்லிம் இளைஞர்களை பச்சைப் படுகொலை செய்து விட்டு, மோதல் சாவு (என்கவுன்டர்) என்று நாடகமாடும் அயோக்கியத்தனத்தை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் மீதும், இதைத் தூண்டிவிட்டவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்டத்தின் மீதான நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 3 - "மரு. ஜாகிர் நாயக்"

உலகப்புகழ் பெற்ற இஸ்லாமிய அழைப்பாளரும், சவூதி, மலேசியா உள்ளிட்ட நாடுகளின் உயர் விருதுகளைப் பெற்றவரும், லட்சக்கணக்கான மக்களின் மனங்கவர்ந்தவருமாகிய மருத்துவர் ஜாகிர் நாயக் மீது மத்திய மாநில மதவெறி அரசுகள் மேற்கொண்டு வரும் பழிவாங்கும் போக்கையும், அவதூறுப் பரப்புகளையும் இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அவரது நிறுவனத்தை 5 ஆண்டுகள் தடைசெய்துள்ள ஜனநாயகப் படுகொலையையும் இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிப்பதோடு, உடனடியாக மருத்துவர் ஜாகிர் நாயக் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை மத்திய, மராட்டிய மாநில பாஜக அரசுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தடையையும் நீக்கவேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் அச்சுறுத்தல் தொடர்ந்தால் மாபெரும் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க நேரும் என்றும் இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.

தீர்மானம் 4 - "பொதுசிவில் சட்டம்"

இந்தியாவின் பன்மைத்துவத்தையும், சமூக அமைதியையும் சீர்குலைக்கும் வகையில் மத்திய அரசு பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்காக எடுக்கும் முன்முயற்சிகளை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. ஜனநாயகத்தைப் பெரும்பான்மைவாதத்தின் மூலம் வீழ்த்தும் வகையில் இந்திய சட்ட ஆணையத்தின் மூலம், பொது சிவில் சட்டம் குறித்து, பொதுமக்களிடம் கருத்தாய்வு நடத்துவதையும் இப்பொதுக்குழு கண்டிக்கிறது. அரசியல் சாசனத்தின் 25வது பிரிவு வழங்கியுள்ள சமயச் சுதந்திரத்திற்கு ஊறு விளைவிக்கும் மதவாத நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு