அதிகம் படிக்கப்பட்ட பதிவு

மருத்துவமனைகள் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும்! - இதஜ வேண்டுகோள்

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம். பாக்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது,

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார். இதனை அடுத்து, பல்வேறு கடைகள் மற்றும் மருத்துவமனைகளில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஏற்க மறுத்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சில இடங்களில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வழங்குவோருக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்ததால் மும்பையில் ஒரு குழந்தை உட்பட சிலர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருவோருக்கு உதவிடும் வகையில், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தை தொடர்பு கொள்ளும்பட்சத்தில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொண்டு,  மருத்துவமனைக்கு நேரில் சென்று அதற்கு பதிலாக தங்களது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணத்தை செலுத்தும் சேவையை மூன்று தினங்கள் மேற்கொண்டது. இதற்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மேலதிமான எவ்வித கட்டணத்தையும் பெறவில்லை. இது தொடர்பான குறுஞ் செய்திகள் வாட்ஸ்ஆப் வாயிலாகவும், முகநூல் வாயிலாகவும் தெரிவிக்கப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் ஏராளமான பொது மக்கள் பயன் பெற்றனர்.

பல தனியார் மருத்துவமனைகள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க தொடர்ந்து மறுத்து வருகின்றன. தினந்தோறும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தை தொடர்பு கொள்ளும் பொது மக்கள் ஜமாஅத் உதவி செய்திட கோரிக்கை வைத்து வருகின்றனர்.இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தும் தங்களால் இயன்ற அளவு பொது மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறது.

மருந்துக் கடைகள் எதிர்வரும் நவம்பர் 24ம் தேதிவரை பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோல், மத்திய அரசு நவம்பர் 24ம் தேதிவரை பொது மக்கள் வழங்கும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை தனியார் மருத்துவமனைகள் / ஸ்கேன் சென்டர்கள் / பரிசோதனை நிலையங்கள்/ இரத்தப் பரிசோதனை நிலையங்கள் ஆகியவை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்த வேண்டும்.

இந்த விஷயத்தில் மருத்துவமனைகள் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு