இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா த.முருங்கப்பட்டியில் உள்ள வெடிமருந்து தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில், இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 15 க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக வெளியான செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகின்ற இந்த தொழிற்சாலை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டுள்ளன. தொழிற்சாலையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசுபாடு, சுகாதர சீர்கேடு போன்ற பல்வேறு பிரச்சனைகளால் வெடிமருந்து நிறுவனங்களே இப்பகுதியில் இருக்கக் கூடாது என்று பொதுமக்கள் பல வருடங்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகியுள்ளன.
தமிழகத்தில் இது போன்ற வெடிவிபத்துகளால் தொடர்ச்சியாக தொழிலாளர்களும், பொதுமக்களும் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே வெடி விபத்து சம்பந்தமாக விரிவான விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் உள்ள இது போன்ற வெடிமருந்து நிறுவனங்கள் மூடப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ 10 இலட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும்.மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும். இதுபோன்ற தொழிற்சாலைகள் பாதுகாப்பு அம்சங்கள் பொருந்தியதா என கண்டறிந்து எதிர்காலத்தில் விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்: பி.எஸ்.ஐ. கனி
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்